நீலகிரி: பெரிய மீசை வைத்து இருந்ததற்காக காவலர் ஒருவரை நீதிபதி கண்டித்தார். மேலும், உடனடியாக மீசையைச் சிறிதாக கத்தரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தொடர்பாக அங்கு வந்திருந்தார் காவலர் ராஜேஷ் கண்ணா. அவர் அங்குள்ள அம்பலமூலா காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார்.
வழக்கு விசாரணையின்போது நீதிபதிக்கு மரியாதை தெரிவிக்கும்விதமாக வணக்கம் தெரிவித்த ராஜேஷ் கண்ணாவின் பெரிய, முரட்டு மீசையைக் கண்ட நீதிபதி கோபமானார். இதையடுத்து ராஜேஷ் கண்ணா தனது முரட்டு மீசையைக் கத்தரித்து மற்றவர்களைப் போல் சிறிய மீசையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், மீசையைக் கத்தரித்த பின்னர் தம்மிடம் வந்து அதைக் காண்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட ராஜேஷ் கண்ணாவும் அவ்வாறே செய்தார்.
எனினும், நீதிமன்றத்தில் அனைவரது முன்னிலையில் நீதிபதி தம்மிடம் நடந்துகொண்ட விதம் குறித்து உயர் அதிகாரிகளிடம் அவர் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையில் பணியாற்றுவோர் தாடி வளர்க்கத்தான் பல கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் எவ்வளவு பெரிய மீசை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு என்றும் காவலர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

