ஒசூர்: மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நேற்று முன்தினம் ஒசூரில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
பெரிய நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து தரக்கூடிய பொருள்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஒசூர் தளி சாலை மாநகராட்சிப் பூங்கா பகுதியில் நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.
மத்திய, மாநில அரசுகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒசூர் சிறு, குறுந்தொழில் சங்கத் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
இது முதற்கட்டமாக நடந்துள்ள கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டுமே என்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அச்சங்க நிர்வாகிகள் எச்சரித்தனர்.

