ஈரோடு: ஏரிக்குள் லாரி விழுந்த விபத்தில் (படம்) அதில் இருந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர் உயிர் பிழைத்தனர். இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் நிகழ்ந்துள்ளது.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் செங்கல் ஏற்றி வந்த அந்த லாரி தாரமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
ஆப்பக்கூடல் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, தாறுமாறாக ஓடி, இறிதியில் கூத்தம்பூண்டி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரி ஓட்டுநர் சுப்பிரமணி என்பவர் எப்படியோ சிரமப்பட்டு லாரியில் இருந்து வெளியேறி கரை சேர்ந்தார். எனினும் அவருடன் வந்த செங்கல் சூலைத் தொழிலாளர்கள் இருவர் லாரிக்குள் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, அங்குள்ள படகோட்டி ஒருவரது உதவியுடன் இரு தொழிலாளர்களையும் மீட்டனர்.

