போக்குவரத்து அபராதம் செலுத்த
புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
சென்னை: இனி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனமோட்டிகள் அதற்கான அபராதத் தொகையை 'கியூ ஆர் கோட்' (QR Code) மூலம் செலுத்த முடியும்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அபராதத் தொகை செலுத்துவதை எளிமைப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை தரவிருக்கும் தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் மிக விரைவில் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்குத் தொற்று
சென்னை: கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு காரணமாக தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சோர்வாக இருந்ததை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, டுவிட்டரில் பதிவிட்ட அவர், "அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பத்திரப்பதிவுத்துறை புதிய சாதனை
சென்னை: கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12ஆம் தேதி வரையில் நூறு நாள்களில் ரூ.4,988 கோடி வருவாய் ஈட்டி தமிழ்நாடு பதிவுத்துறை சாதனை படைத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.2,577.43 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. தற்போது ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது
புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் ஆறு பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 400 மீனவர்கள் இரு நாள்களுக்குப் பிறகு 93 விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அவர்களில் ஆறு பேர் 30 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

