ஓபிஎஸ் அணியின் ஆறு மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்
சென்னை: அதிமுகவில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆறு மாவட்டச் செயலாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்தனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புகளுக்கு இடையே நடைபெற்று வந்த மறைமுக மோதல், அண்மையில் கூடிய பொதுக்குழுக் கூட்டத்தின்போது பெரிதாக வெடித்தது. அதன் எதிரொலியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
அதையடுத்து, அவருக்கு ஆதரவாக உள்ள ஆறு மாவட்டச் செயலாளர்களின் பதவியைப் பறிப்பது என எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்தது. எனினும், இந்த ஆறு பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட மாட்டார்கள் என்றும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், கட்சிப் பொறுப்பில் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதனும் தங்கமணியும் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஓபிஎஸ் பக்கம் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் ஒத்துவராதவர்கள் கட்சியை விட்டே நீக்கப்படுவார்கள் என்றும் அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக தாம் இன்னும் பொறுப்பில் நீடிப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.
மேலும், பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்திருப்பது செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, புதிய நியமனங்களை ஏற்கக்கூடாது என்று தமது கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற இருதரப்பினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தலைமைக் கழகத்தை தங்கள்வசம் வைத்திருந்தால் மட்டுமே தொண்டர்கள் ஆதரவு நீடிக்கும் என இருதரப்பினரும் கருதுவதாகத் தெரிகிறது.
முன்னதாக, இருவரது ஆதரவாளர்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டதை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

