ஸ்ரீநகர்: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 16வது கட்ட பேச்சுவார்த்தை வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வந்திருக்கிறது.
லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து அவ்வப்போது ஊடுருவி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு, மே மாதம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதே ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது.
அச்சமயம் ஊடுருவலை இந்திய வீரர்கள் கடுமையாக எதிர்த்ததால் மோதல் வெடித்தது. அப்போது இருதரப்பினரும் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்திய தரப்பில் 20 பேரும் சீன ராணுவத்தினர் 40 பேரும் கொல்லப்பட்டதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் சீன துருப்புகள் குவிக்கப்பட்டன. மேலும், ராணுவத்துக்கு ஏற்ற வகையில் பல்வேறு கட்டுமானப் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது.
பதிலுக்கு, இந்தியாவும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
பதற்றத்தைக் குறைக்க, இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. அதன் பலனாக, இதுவரை ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. இதனால் இருதரப்பிலும் எல்லையில் உள்ள துருப்புகள் குறைக்கப்பட்டன.
எனினும், சீனா சில கட்டுமானப் பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா அண்மையில் இந்தியாவை எச்சரித்தது.
இந்நிலையில், வரும் 17ஆம் தேதி, 16வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்க உள்ளார்.
லடாக்கின் பான்காங் ஏரியில் சீன ராணுவம் புதிதாக பாலம் கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, புதிய பேச்சுவார்த்தையின்போது இந்தப் பிரச்சினை குறித்து இந்தியா கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே கடைசியாக மார்ச் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

