கோவை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் காவல்துறையின் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவருக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் சிலர் புகுந்து அங்குள்ள பல பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், அந்த பங்களாவின் காவலாளி கொல்லப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை விசாரிக்கப்படாத பலரிடம் தனிப்படையினர் தற்போது திடீர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார், உதவியாளர் பழனிசாமி, புதுவையைச் சேர்ந்த சொகுசு விடுதி உரிமையாளர் நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடமும் மீண்டும் விசாரணை நடத்திய தனிப்படையினர், திடீர் திருப்பமாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
இவர் சிறிது காலம் மட்டுமே போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதன் தலைமை அலுவலகத்துக்காகவும் கார் ஓட்டியுள்ளார்.
புதிய விசாரணைகளால் இவ்வழக்கு சூடு பிடித்துள்ளது.

