கோவை ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த ஆறு பேர் மீட்பு
கோவை: நூற்பாலையில் கொத்தடிமைகளாக இருந்த ஆறு பெண்களை தமிழக புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீட்டனர். கோவையில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்த இவர்கள் ஆறு பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஊதியம் வழங்காமலும் சொந்த ஊருக்கு அனுப்பாமலும் ஆலை நிர்வாகம் அவர்களை வேலை வாங்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் தங்களை மீட்குமாறு ஜார்கண்ட் அரசிடம் உதவி கேட்டனர். இத்தகவல் தமிழக அரசுக்கு கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஆங்கில கலப்பின்றி தமிழில் பேச வேண்டும்: நீதிபதி வலியுறுத்து
சென்னை: தமிழகத்தில் பள்ளி இறுதித் தேர்வு தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறாதது கவலை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்நிலை மாற வேண்டுமானால் அனைவரும் ஆங்கில கலப்பின்றி தமிழில் பேசுவது அவசியம் என்றார். "வருங்கால சந்ததியினருக்குத் தமிழில் பேச, எழுத சொல்லித் தருவது நமது கடமை. அதை நாம் சரிவர செய்ய வேண்டும்," என்றார் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்.
நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகளின் பட்டியல் வெளியீடு
புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும்போது மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக நீண்ட காலமாக புகார் நிலவி வருகிறது. இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலர் வெளியிட்டுள்ளார். சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி உள்ளிட்ட வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று எதன் அடிப்படையில் ஒரு வார்த்தை ஒதுக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கட்டட இடிப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்படுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படு வதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, "ஒவ்வொரு மதக்கலவரத்துக்குப் பின்பும் இதுபோன்ற கட்டட இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இது ஜனநாயக அமைப்புக்கு எதிரானது," என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை யும் செவிமடுத்த நீதிபதிகள், பிறப்பித்த கட்டட இடிப்பு நடவடிக்கைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்றும் அவ்வாறு செய்தால் அது மாநகராட்சி அதிகாரிகளின் உரிமைகளை முடக்கிவிடும் என்றும் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள அரிய கலைப் பொருள்களை மீட்க கோரிக்கை
சென்னை: இலங்கையிலும் கர்நாடகாவிலும் கேட்பாரற்றுக் காணப்படும் அரிய கலைப்பொருள்களை மீட்க வேண்டும் என்று முன்னாள் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஐஜி பொன்மாணிக்கவேல் மத்திய, மாநில அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இரு அரசு களுக்கும் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், இலங்கையை 78 ஆண்டுகளுக்கு மேலாக சோழ மன்னர்கள் ஆட்சி செய்துள்ள னர் என்றும் அதற்குச் சான்றாக அந்நாட்டில் உத்தம சோழீஸ் வரனின் மகாதேவர் கோவில் உள்ளது என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். "தற்போது அந்தக் கோவில் கேட்பாரற்று கிடக்கி றது. அக்கோவிலில் மிகப்பெரிய கருங்கல் துாண் உள்ளது. இதில், தமிழின் பழைமையான வட்ட எழுத்து களில், ராஜராஜ சோழன் இலங்கையை ஆண்டதற்கான குறிப்பு கள் உள்ளன. இதுபோன்ற கலைப்பொக்கிஷங்களை மீட்க வேண்டும்," என பொன்மாணிக்கவேல் வலியுறுத்தி உள்ளார்.
கனமழையால் அந்தமான் விமானம் ரத்து
சென்னை: பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். எனினும், மோசமான வானிலை காரணமாக விமானத்தை இயக்க இயலாது என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

