தமிழக அமைச்சருக்கு கிருமித்தொற்று
சென்னை: ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் தேறிவருவதாகவும் இன்னும் சில நாள்கள் அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டும் எனவும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனிடையே, தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசரும் தனக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உடற்சோர்வு இருப்பதால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,283 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது.
நடைப்பயிற்சி சென்ற பெற்றோர்; மாடியிலிருந்து விழுந்த சிறுமி பலி
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரவி-சிந்தியா தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது நான்கு வயது மகள் வில்சி தூங்கிக்கெண்டிருந்தபோது, வீட்டைப் பூட்டிவிட்டு தம்பதியர் நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளனர். தூக்கம் கலைந்த சிறுமி, பால்கனியில் நாற்காலியைப் போட்டு ஏறியபோது, ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். சாலையோரம் சென்றவர்கள் சிறுமியை மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றபோது, சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். விசாரணை நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்கள் கம்மல், சங்கிலி, காப்பு அணியத் தடை
சென்னை: தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறை மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளிக்கு வரும்போது மாணவ, மாணவிகள் கம்மல், சங்கிலி, மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் கோயில் கயிறு, காப்பு உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பச்சை குத்திக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது. பிறந்தநாள் என்றாலும் சீருடையில்தான் பள்ளிக்கு வரவேண்டும். இரு சக்கர வாகனங்களில் வருவதற்கும் கைபேசிகள் கொண்டு வருவதற்கும் அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இரட்டைக் கன்றுகளை ஈன்ற பசு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் நியூசிலாந்து நாட்டு ரக பசுமாடு ஒன்று ஒரே பிரசவத்தில் இரட்டைக் கன்றுகளை ஈன்றுள்ளது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் அழ்த்தியுள்ளது. இங்குள்ள சேதுபதி நகரைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர், 15க்கும் ேமற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அவரது, நியூசிலாந்து ரக பசுமாடு இரட்டைக் கன்றுகளை ஈன்றுள்ள நிலையில், கன்றுகளைப் பராமரிக்க அரசு உதவவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

