சென்னை: நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு கார் தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று முடித்துவைத்து தீர்ப்பளித்தார்.
"தான் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 2019 ஜனவரி மாதத்துக்கு முன்னர் முழு நுழைவு வரியையும் விஜய் தரப்பில் செலுத் தப்பட்டிருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கக்கூடாது. ஆனால், 2019 ஜனவரி மாதத்துக்குப் பின்னரும் நுழைவு வரியை முழுமையாகச் செலுத்தாமல் இருந்திருந்தால் அபராதம் விதிக்கலாம்," என வணிக வரித்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 'பிஎம்டபிள்யூ எக்ஸ் 5' காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி மாநில அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காருக்கு 7 லட்சத்து 98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில், இடைப்பட்ட காலத்திற்கு 30 லட்சத்து 23,000 ரூபாய் அபராதமாகச் செலுத்தவேண்டுமென வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜய் இவ் வழக்கைத் தொடர்ந்தார்.

