ஏதாவது ஒரு தொழில் தெரிந்திருக்க வேண்டும். அந்தத் தொழில் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைசெய்வதாக இருக்கவேண்டும் என்கிறார் திரு செல்வராஜ் என்ற 55 வயது ஆடவர்.
தன்னை மூங்கில் தொழில் சிற்பி என்று குறிப்பிட்ட இவர், மூங்கில் மரத்தை வாங்கி அதை உடைத்து செதுக்கி இழைத்து மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பெரிதும் பயன் படும் பொருள்களாக உருவாக்கி அவற்றை விற்று வாழ்கிறார்.
"என் தந்தை தலைமுறை முதற்கொண்டு இதே இடம்தான், இதே தொழில்தான். பள்ளிக்கூடம் சென்று படிக்காத என் தந்தை, என்னை படி படி என்று படித்துப் படித்து சொன்னார். எனக்குப் படிப்பு ஏறவில்லை. ஆனால் என் தந்தையிடம் இருந்து கைவேலை என்னைத் தொற்றிக்கொண்டுவிட்டது. மூங்கில் வேலையை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
"கண்ணியமாக பிழைக்க அதுதான் வழி என்று முடிவு செய்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் இது தான் என் தொழில்," என்று, கஞ்சா நகரம் என்ற கிராமத்தில், சாலை ஓரம் உள்ள தன் வீட்டிற்கு வெளியே மூங்கில் கூடையைப் பின்னியபடியே சொன்னார் செல்வராஜ்.
கஞ்சாநகரம், மயிலாடுதுறை பூம்புகார் வழித்தடத்தில் உள்ளது.
"இளம் மூங்கில் வேலைக்கு அவ்வளவாக ஒத்துவராது. முற்றிய கழியாகப் பார்த்து வாங்குவேன்.
"மூங்கில் கழி 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலைக்குக் கிடைக்கும். அதைக் கூடை என்றால் கூடைக்குத் தகுந்தாற்போல், முறம் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் அரிவாளால் பிளந்து இழைத்து அகனி, மட்டை, சும்புவாக ஆக்கிக்கொண்டு பிறகு பின்னத் தொடங்குவோம்.
"என் மனைவி சாந்தியும் என்னைப் போல் மூங்கில் தொழில் சிற்பி. இருவருமாக கைத்தொழில் மூலம் கண்ணியமாக காலம் கழிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
"கூடை, சாதம் வடிக்கும் கூடை, கோழிக்கூடை, முறம், ஏணி, தட்டுகள், அலக்கு, துடைப்பம், வாய்ப்பெட்டி (நாய், மாடு வாயை மூடும் மூங்கில் மூடி), கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட பலவும் உருவாக்கி விற்கிறேன்.
"கூடை ரூ. 300 விலை போகும். ஏணி உயரத்திற்கு ஏற்ப ரூ. 1,000 வரை விற்பேன். பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும். நாளுக்குச் சராசரியாக ரூ.500 சம்பாதிக்கிறேன். கடன் இன்றி காலம் ஓடுகிறது. ஒரு கூடை பின்னி முடிக்க மூன்று மணி நேரம் ஆகும். ஒரு நாளில் இரண்டு பின்னலாம்.
"எனக்கு கோபால் என்ற ஒரே மகன். என் மகன் கனரக வாகனம் ஓட்டுகிறான். இந்த வேலை அவனுக்கு ஒத்துவரவில்லை," என்றார் செல்வராஜ்.
நான் சென்று அவரைச் சந்தித்தபோது ஒரு கோழிக் கூடையைப் பின்னிக்கொண்டு இருந்தார்.
"வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் கோழி ஓடிவிடாமல் இருப்பதற்காக இரவில் கோழி மீது கூடையைக் கவிழ்த்து மூடிவிடுவார்கள். அத்தகைய கூடை காற்றோட்டம் அதிகம் இருப்பதாக இருக்க வேண்டும்.
"ஆகையால் அத்தகைய கூடை ஒற்றைப் பின்னல் கூடையாக இருக்கும். வீட்டில் பயன்படுத்தும் கூடைகள், முறம் எல்லாம் இரட்டைப் பின்னல் கொண்டவை.
"கூடையில் நடு நடுவே செங்குத்தாக இருப்பவை 'பட்டைகள்'. அவற்றின் ஊடே மாற்றி மாற்றிப் போட்டு இழுத்து பின்னப் படுபவைதான் 'சும்பு'. அடியில் வலுவுக்காக தட்டுபோல் இருப்பவை 'அகனி' எனப்படும். திருமணத்தில் சாதம் வடிக்க மூங்கில் கூடையைத்தான் பயன்படுத்துவார்கள். அவை ஒற்றைப் பின்னல் கூடைகள்.
"அதேபோல் கோயில் குடமுழுக்கின்போது சீர்வரிசைகளுக்கும் கலசங்களில் புனித நீர் ஊற்றுவதற்கும் மூங்கில் கூடைகள் அவசியம்.
"வீட்டில் தண்ணீரில் புழங்காமல் பயன்படுத்தப்படும் மூங்கில் முறம், கூடையைச் சாணம் கொண்டு பூசி மெழுகி வைத்துக்கொண்டால் ஆண்டுக் கணக்கில் உழைக்கும். மூங்கில் ஏணிக்கு நிறம் அடித்து வைத்துக்கொள்ளலாம்," என்று செல்வராஜ் விளக்கினார்.
"இப்போதெல்லம் மக்கள் பிளாஸ்டிக் போன்றவை பக்கம் சாய்ந்துவிட்டார்கள். அவை வசதியாக இருக்கலாம். ஆனால் அவை நல்லதல்ல. உடல் நலனுக்கு அவை எல்லாம் கெடுதல். அதோடு, சுற்றுப்புறத்திற்கும் அவை நல்லவையாகத் தெரியவில்லை.
"ஆனால் மூங்கில் அப்படி அல்ல. இனிதான புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகள் முதல், இங்கே உயிர் போன மனிதனின் உடலைச் சுமக்கும் படுக்கைவரை மனிதனுடன் கடைசிவரை மூங்கில் வருகிறது.
"மூங்கில் குத்தாக வளரும். தனி மூங்கில் மரம் கிளை விடாது.
"ஆனால் பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல் பெருகி குடும்பம் குடும்பமாக உடல் நலனுடன் மக்கள் வாழ பல வழிகளில், வடிவங்களில் மூங்கில் உதவுகிறது.
"மூங்கில் குருத்தை சிலர் உணவாக உண்பதுண்டு. மூங்கில் பல வழிகளில் உறுதுணையாக இருந்து உதவுகிறது. மனிதன் இயற்கை யோடு இணைந்து வாழ வேண்டும். அதற்கு அவர்களின் மனப்போக்கு மாற வேண்டும்.
"ஆகையால் மூங்கில் பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும்," மூங்கிலால் ஆன பொருள்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். நான் செய்யும் மூங்கில் தொழிலுக்கு அரசு ஊக்கமூட்ட வேண்டும்," என்று கூடையைப் பின்னியபடியே செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.
மனித வாழ்க்கையில் மூங்கிலுக்கு முக்கிய இடம் உண்டு என்று சொல்லும் செல்வராஜ், 55, மூங்கிலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை உருவாக்கி விற்கிறார். 'நான் சுற்றுச்சூழல் தோழன்' என்கிறார்.
மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் உள்ள கஞ்சாநகரம் என்ற கிராமத்தில் தன் வீட்டுக்கு வெளியே சாலை ஓரமாக கோழிக்கூடை பின்னும் திரு செல்வராஜ், வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசுகிறார். ஒற்றைப் பின்னல் கூடை ஒன்றைப் பின்னி முடிக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்கிறார். இவர் உருவாக்கும் கூடைகள், தட்டுகள் திருமணம், கோயில் குடமுழுக்கில் பயன் படுத்தப்படுகின்றன.
செய்தி&
படங்கள்:
எம் கே. ருஷ்யேந்திரன்
மூங்கில் தயாரிப்புகள் எல்லாமே மனிதனுக்கும் இயற்கைக்கும் பெரிதும் உதவுபவை. என் வாழ்க்கையில் மூங்கில்தான் ஏணியாக இருக்கிறது. வாழும்போது மட்டுமன்றி, இங்கே மனிதன் உயிர்போன பிறகும் உடலோடு உடன் செல்வது மூங்கில். மூங்கிலும் மூங்கில் தொழிலும் எதிலும் துணை நிற்கும்.
செல்வராஜ், 55.

