காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் தாராபுரம் சாலையில் இச்சிப்பட்டி பகுதியில் காற்றாலைகள் உள்ளன.
மக்கள் நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2 பிளாஸ்டிக் பைகளில் மனித மண்டை ஓடுகளும் எலும்புக் கூடுகளும் இருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஊதியூர் காவல் துறையினர் அவற்றை கைப்பற்றினர். அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யார் கொண்டு வந்து வீசிச் சென்றுள்ளனர் என எந்த விவரமும் தெரியவில்லை. கொலை போன்ற சம்பவம் நடந்து உடல்களை மறைக்க கொண்டு வந்து வீசப்பட்டதா அல்லது பில்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபடும் மந்திரவாதிகள் பயன்படுத்தியவையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதிக்கு அருகில் உள்ள நத்தக்காடையூரில் கீழ் பவானி பாசன வாய்க்காலில் கடந்த மாதம் ஒரு மனித எலும்புக் கூடு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே போல் கருக்க பாளையம் பிரிவில், வீட்டு மனைப் பிரிவில் இருந்த மேல் நிலைத்தொட்டியில் மனித எலும்புக்கூடு ஒன்றும், விலங்கு வேட்டைக்கு பயன்படும் சுருக்கு கம்பிகளும் கிடந்தன. இது போன்ற சம்பவங்கள் காங்கேயம் பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படம்: தமிழக ஊடகம்

