அரிசிக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க எதிர்ப்பு; மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்
சென்னை: சென்னை, தர்மபுரி உட்பட மாநிலம் முழுவதும் சுமார் நூறாயிரம் அரிசிக் கடைகளும் ஆலைகளும் நேற்று மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் அரிசி வாங்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
அரிசிக்கு ஐந்து விழுக்காடு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், அரிசிக் கடைகள் ஒருநாள் மூடப்படும் என அவற்றின் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று மாநிலம் தழுவிய அளவில் சுமார் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட அரிசிக் கடைகள் அடைக்கப்பட்டன.
சென்னையில் மட்டும் ஆயிரம் அரிசிக் கடைகள் மூடப்பட்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
ஐந்து விழுக்காடு அளவிலான ஜிஎஸ்டி வரியால் தங்களுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என்று வியாபாரிகள் தரப்பு கூறுகிறது. மேலும், அரிசி விலை கணிசமாக உயரும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
வரி விதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஒரு மூட்டை அரிசியின் விலை நூறு ரூபாய் அதிகரித்துள்ளது என்றும் ஒரு கிலோ அரிசியின் விலை 3 முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
"இது கவலைக்குரிய விஷயம் என்பதால் எங்களுடைய எதிர்ப்பை ஒருநாள் கடையடைப்பின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்குப் புலப்படுத்தி உள்ளோம்.
சென்னையில் உள்ள அனைத்து சந்தைகளிலும் இயங்கி வந்த அரிசிக் கடைகள் மூடப்பட்டன. திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், வடபழனி, வண்ணாரப்பேட்டை, மாதவரம், செங்குன்றம் பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் அரிசி கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன," என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வியாபாரிகளின் இந்தத் திடீர் போராட்டம் காரணமாக அரிசி வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அரிசி உற்பத்தி, விற்பனை தொழில் பெருமளவு பாதிக்கப்படும் என்றும் மொத்த, சில்லறை விற்பனை செய்யும் அரிசி வியாபாரிகள் நலிவடைந்து வேறு தொழிலுக்குச் செல்ல நேரிடும் என்றும் வியாபாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாநிலத்தில் இருந்து வரும் நெல், அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றின் கொள்முதலிலும் ஜிஎஸ்டி முறை வரிவிதிப்பு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்கிறார்கள் வியாபாரிகள்.

