செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
757db7d5-4bbd-4d0e-b82d-85414ec107e1
-

'முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார்'

சென்னை: கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வர் எந்த நேரத்திலும் வீட்டுக்கு திரும்பிவிடுவார் என்றும் அதிபர் தேர்தலில் அவர் வாக்களிப்பார் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இந்தியாவில் குரங்கம்மை பரவத் தொடங்கி உள்ளதால் அனைத்துலக விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர். இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'நீட்' தேர்வு எழுதும் 68 வயது முதியவர்

தஞ்சை: மருத்துவப் படிப்புக் கான 'நீட்' நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு தயாராகி வருகிறார் 68 வயதான சுப்பிரமணியன் (படம்). தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், கூட்டுறவுத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறு வயது முதலே தமக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு என்றும் இதுவரை 28 பட்டப்படிப்புகளை முடித்துள்ளதாகவும் கூறும் சுப்பிரமணியன், வழக்கறிஞர், கணக்காய்வாளர், மனநல நிபுணர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர். "எனது பேத்திகளில் ஒருவர் நீட் தேர்வு எழுத முடியாமல் போனதால் விவசாயத்துறை சார்ந்த படிப்பை மேற்கொண்டு வருகிறார். அந்தப் பேத்தி அளித்த ஊக்கத்தின் காரணமாக நீட் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதை எழுதுகிறேன்," என்கிறார் சுப்பிரமணியன்.

மேலும் ஏழு இலங்கை அகதிகள் ராமேசுவரம் வந்தடைந்தனர்

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து மேலும் ஏழு பேர் அகதிகளாக ராமேசுவரம் வந்தடைந்தனர். முன்னதாக, அவர்கள் வந்த படகு ஏழு பேரையும் தனுஷ்கோடியில் உள்ள மணல்திட்டில் இறக்கிவிட்டுச் சென்றது. இதுகுறித்து மீனவர்கள் மூலம் தகவலறிந்த கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் கரைக்கு அழைத்து வந்தனர். ஏழு பேரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைக்குப் பின் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை: அதிமுக தலைமையகத்தை திறந்தால் அசம்பாவிதங்கள் நிகழும்

சென்னை: அதிமுகவில் தற்போது உட்கட்சிப் பூசல் பெரிதாகி உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றுவதில் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் முனைப்பாக உள்ளனர். இருவரும் எதிர்த்தரப்பு ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்து வருகின்றனர். மேலும், கட்சியின் தலைமையகத்தைக் கைப்பற்றுவதில் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக தலைமையகம் மீண்டும் திறக்கப்பட்டால் அசம்பா விதங்கள் நிகழக்கூடும் என காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.