விழுப்புரம்: சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பம் ஒன்று விழுப்புரம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியைப் போன்று தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் தொல்லியல்துறை சார்பில் தீவிர அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரத்தை அடுத்துள்ள நேமூரில் வரலாறு, பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆய்வு நடக்கும் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தச் சிற்பம் சற்றேறக்குறைய கிபி எட்டு அல்லது ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்கிறது அகழாய்வுக்குழு.
மொத்தம் ஆறு அடி உயரம் உள்ள பலகைக் கல்லில் அச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிலையாக இருக்கக்கூடும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
"எட்டு கரங்களுடன் உள்ள கொற்றவை தக்க ஆயுதங்களை ஏந்தி, எருமைத் தலையின் மீது நிற்கும்படி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இடது கரத்தின் கீழே மான் காட்டப்பட்டு இருக்கிறது. கால்களின் இரண்டு பக்கங்களிலும் வணங்கி பூசை செய்யும் நிலையில் அடியவர் இருவரது உருவங்கள் காணப்படுகின்றன.
"கொற்றவை சிற்பத்தின் அருகிலேயே ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும் ஆறு முகங்களைக் கொண்ட சிற்பம் தனியே காணப்படுகிறது. இது முருகனைக் குறிப்பதாகும். இந்த சிற்பமும் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்," என அகழாய்வுப் பணியில் ஒருங்கிணைப்பாளரான செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே மலமஞ்சனுார் வீரபத்திர சுவாமி கோவிலில் இருந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10 ஐம்பொன் சுவாமி சிலைகள் மாயமாகி உள்ளன.
இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

