சென்னை: தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியும் குழந்தையும் இருப்பதை மறைத்து, சென்னை ஐஐடியில் பேராசிரியராக வேலை பார்ப்பதாகக் கூறி, பெண் மருத்துவரைத் திருமணம் செய்து மோசடி செய்துள்ள இட்லி கடை யின் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை தியாகராய நகர் அருகே உள்ள அடுக்குமாடி குடி யிருப்பில் வசிக்கும் சண்முக மயூரி, 29, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மயூரிக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன், 34, என்பவருக்கும் கடந்த 2020ல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியான சென்னை ஐஐடியில் முனைவா் பட்டம் பெற்று, அங்கேயே பேராசிரியராகப் பணிபுரிவதாகக் கூறிய பிரபாகரனுக்கு 111 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.15 லட்சம் மதிப்பிலான கார் வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
திருமணமான சில மாதங்களிலேயே தினமும் மதுபோதையுடன் வீட்டுக்கு வந்த பிரபாகரன், வீடு வாங்கிக் கொடுக்கும்படி கேட்டு மயூரியை அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மயூரி, கணவரைப் பற்றி தனது தம்பியுடன் சேர்ந்து விசாரித்தபோது, மனவேதனை அடைந்தார்.
முதலில் பேராசிரியர் என ஏமாற்றி திருமணம் செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
அடுத்ததாக, பிரபாகரனுக்கு ஏற்ெகனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதும் அதனை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கணவர் மீது மயூரி புகார் அளித்தார்.
வரதட்சணைக் கொடுமை, ஆபாசமாகப் பேசுதல், நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பிரபாகரனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான பிரபாகரனின் தந்தை விஸ்வநாதன், 70, தாய் மஞ்சனை, 65, சகோதரா் கண்ணதாசன், 38, அவரது மனைவி வனிதா, 32, மற்றொரு சகோதரா் நெப்போலியன், 31, ஆகியோரையும் தேடி வருகின்றனர்.
விசாரணையில், பிரபாகரன், சண்முக மயூரி நகைகளை அடகு வைத்து அந்தப் பணத்தின் மூலம் அசோக்நகரில் தனது குடும்பத்தினருடன் சோ்ந்து இட்லி கடை நடத்திவந்தது தெரியவந்தது.