ஓ.பன்னீர்செல்வம் குணமடைய
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: கொவிட்-19 தொற்றிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக குணமடைந்துவிட்டதால், இன்று வீடு திரும்புவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். "அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் விரைவில் முழுமையாக நலம்பெற விழைகிறேன்," என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து நீக்குவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், முதல்வரின் இப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1.37 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பொன்னுசாமி ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் தங்கப் பசையை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், துபாயில் இருந்து சென்னைக்கு வந்த தமீம் அப்துல் ரஹ்மான், முகமது ஹபீபுல்லா ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், ரூ.63 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 425 கிராம் தங்கப்பசை, சங்கிலிகளைப் பறிமுதல் செய்தனர். அத்துடன், ரூ.19 லட்சம் மதிப்புள்ள ஐபோன் கைபேசிகள், மின்னணுப் ெபாருள்கள், குங்குமப்பூ, சிகரெட்டுகளை மீட்டு, மூவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அதிமுக ஒற்றுமைக்கு வலியுறுத்து
சென்னை: எம்ஜிஆர் துவங்கிய அதிமுக இப்போது பல பிரிவுகளாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. இது அவர்களின் உள்கட்சி விவகாரம். இதை அவர்களே தீர்த்துக்கொள்வர். இதில் பாஜக தலையிடாது என்று தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்னதாகக் கூறியிருந்தார். இருந்தாலும், டெல்லி மேலிடம் இதனை வேறுவிதமாக அணுகுவதாக தகவல். 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அதிமுக ஒன்றாக இருக்கவேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
மகன் இறந்த அதிர்ச்சி; தாயும் பலி
சென்னை: மகனின் இறப்பைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தாயும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர், உற வினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 463 மதிப்பெண்கள் எடுத்து, தாம் படித்த பள்ளியிலேயே முதலிடம் வந்திருந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெய்கணேஷ், 15, நேற்று முன்தினம் மாலை வலிப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உடற்கூராய்வுக்குப் பின்னர், மகனின் உடலைப் பார்த்து தாய் சாந்தி, 35, கதறி அழுதார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சாந்தியும் உயிரிழந்தார். தாய், மகன் இருவரது உடல்களையும் சிங்கப்பெருமாள் இடுகாட்டில் ஒன்றாக வைத்து எரியூட்டினர். படம்: ஊடகம்
ரூ.750 கோடி சொத்து மீட்பு
கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளுக்குச் சொந்தமான ரூ.750 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

