கோவை: நீட் தேர்வை எதிர்கொள் வதற்கு பயந்து, ஒரு சில மாணவ-மாணவிகள் மன உளைச்சல் காரணமாக தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.
"மாணவர்களின் நீட் தேர்வு பயத்தைப் போக்கவே நான் இத் தேர்வை எழுதினேன். மாணவா்கள் முதலில் அச்சத்தைக் களைந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத் திட்டங்களை முழு மையாகப் படித்திருந்தால் வெற்றி பெற்று சாதிக்கலாம்," என்று 70 வயது முதியவர் பிரின்ஸ் மாணிக்கம் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 59 மையங்களில் 142,000க்கும் மேலானோர் நேற்று முன்தினம் நீட் தேர்வை எழுதினர். இவர்களில் ஒருவராக பிரின்ஸ் மாணிக்கமும் இத்தேர்வை எழுதி மாணவா்களுக்கு ஊக்கத்தையும் வியப்பையும் ஏற்படுத்தினாா்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற் கான நுழைவுத்தேர்வாக நீட் உள்ளது. மாணவா்கள் அச்சப்படும் வகையில் அப்படி இத்தோ்வில் என்னதான் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவே தேர்வை எழுதியதாகத் தெரிவிக்கிறாா் கோவை விநாயகபுரத்தைச் சோ்ந்த எம்.பிரின்ஸ் மாணிக்கம்.
இளநிலை வேளாண்மை அறிவியல் பட்டம், பிஎச்டி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள இவா், பரோடா வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.
இவரைப்போலவே, தஞ்சையில் 68 வயதான ராமமூர்த்தி என்பவரும் நீட் தேர்வு எழுதினார். 28 பட்டங்களைப் பெற்றுள்ள இவர், 2020ல் கடைசியாக வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
"இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இத்தேர்வை எழுதியுள்ளேன். பயம், கவலை, சினம் இம்மூன்றும் நீங்கினால் மாணவர்கள் நன்கு முன்னேறலாம்," என்று ராமமூர்த்தி கூறியுள்ளார்.

