குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை, அடையாள அட்டை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இருபது குதிரைகள் சவாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வரும் இடம் என்பதால், காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்படி, சவாரிகளை வழங்கும் குதிரை ஓட்டிகளுக்குச் சீருடையும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் வழங்கினார் மயிலாப்பூர் உதவி ஆணையர் சீனிவாசன். புதுச் சீருடை, அடையாள அட்ைடயுடன் மிடுக்காக பவனி வந்தனர் குதிரை ஓட்டிகள்.
தமிழிலேயே பணப்பரிவர்த்தனை
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம் இயந்திரங்களில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முகாம் ஒதுக்கீடு செய்வது நல்லது
மதுரை: அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் முகாம் ஒதுக்கீடு செய்வது சிறந்தது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கரூர் தோரணங்கல்பட்டியில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
முக்கொம்பு ஆற்றில் ஆபத்து குளியல்
திருச்சி: மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் தண்ணீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது. இதனால், திருச்சி முக்கொம்பு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றை ஒட்டியுள்ள கால்வாயில் இறங்கி ஆபத்தை உணராமல் மக்கள் நீச்சல் அடிக்கின்றனர். சிலர் குதித்து கும்மாளமிடுகின்றனர். பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆற்றில் குளிப்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபத்தில் சுட்டதில் அறுவர் காயம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே விவசாயி ஒருவர் தனது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விவசாயியை அரூர் காவல்துறையினர் கைது செய்தனர். அரூரை அடுத்துள்ள நலமாங்கடையைச் சேர்ந்தவர் கரியராமன், 40. அன்றாட கூலித் தொழிலாளியான இவருக்கும் இவரது மகன் ஏழுமலைக்கும், 19, நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டு, மகனை அடித்துள்ளார். இதை தட்டிக்கேட்ட தாய் கண்ணகியையும் தாக்கியதால், தனது தந்தையை வீட்டை விட்டு மகன் வெளியே தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கரியராமன் நாட்டுத் துப்பாக்கியால் மனைவி, மகனை நோக்கிச் சுட்டதில் அறுவர் காயமடைந்தனர்.
அதிபர் தேர்தலில் 100% வாக்களிப்பு
சென்னை: அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 100% நிறைவுபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில் நேற்று வாக்களித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நண்பகலில் வாக்களித்தார். அமைச்சர் நாசர் கொரோனா பாதுகாப்பு உடையுடன் அவசர சிகிச்சை வாகனத்தில் வந்து வாக்களித்தார்.

