கோவை: தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், கிணத்துக்கடவு பகுதி விவசாயிகள் தாங்கள் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியைக் குப்பையில் கொட்டிவிட்டுச் சென்றனர்.
தமிழகத்தில் தக்காளி உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது கோவை மாவட்டம்.
இங்குள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி முக்கிய விவசாயமாக உள்ளது.
இந்நிலையில், இந்த தக்காளி களை கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு சென்று விவசாயிகள் ஏலம் விட்டு வருகின்றனர்.
இங்கு கொள்முதல் செய்யப்படும் தக்காளியை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1,000 வரை விற்பனையானது.
தற்போது கனமழையால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், நேற்று ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கும் கீழ் சென்றது.
அத்துடன், கிணத்துக்கடவு சந்தைக்கு தக்காளியை வாங்கும் வியாபாரிகள் யாரும் வராததால், விற்பனையாகாமல் அப்படியே கிடந்தன. இதனால், வருத்த மடைந்த விவசாயிகள், தாங்கள் கொண்டுவந்த தக்காளியைக் குப்பையில் கொட்டிச்சென்றனர்.
"ஓர் ஏக்கர் தக்காளி நடவு செய்வதற்கு ரூ.75,000 வரை செலவாகிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளிக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

