பூண்டுக் கழிவுகளை எரிப்பதால்
மூச்சுத் திணறல் ஏற்படுவதாக புகார்
வடுகப்பட்டி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் வெள்ளைப் பூண்டு சந்தை உள்ளது. இங்கு அனைத்துவிதமான பூண்டுகளும் கிடைக்கும் என்பதால் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பூண்டு வியாபாரிகள் வருகின்றனர். பூண்டுகளைத் தரம்பிரித்து லாரிகளில் ஏற்றி அனுப்பிவிட்டு, அதன் கழிவுகளைச் சாலையில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால், வடுகப்பட்டி முழுவதும் புகைமண்டலமாக மாறி காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. மூச்சுவிட முடியாமல் சிரப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, பூண்டுக் கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரமாகப் பயன்படுத்த வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
மாற்றுத் திறனாளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவித்திறன் குன்றியோருக்கான உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இரு ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் செவித்திறன் குன்றிேயார் சங்கத்தினர் புகார் கூறினர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவித்திறன் குன்றியவர்கள் ஊர்வலமாகப் பள்ளிக்கு வந்தனர். பாலியல் சீண்டல் செய்யும் ஆசிரியர் களைக் கைது செய்யும்படி கண்டன முழக்கமிட்டனர். விசாரணை நடத்துவது உறுதியென காவலர்கள் கூறினர்.
'சிவாஜி கணேசன் எழுதிவைத்த
உயில் பொய்யானது என்பது தவறு'
சென்னை: நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்திலும் சொத்துத் தகராறு ஏற்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் மரணத்துக்குப் பிறகு, அவருக்குச் சொந்தமான ரூ.270 கோடி சொத்துகள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை எனவும் வீடுகளின் வாடகைப் பங்கை தங்களுக்கு வழங்காமல் ராம்குமாரும் பிரபுவும் ஏமாற்றியதாகவும் தங்களது பங்கை பிரித்து தர உத்தரவிடக்கோரியும் சிவாஜியின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தந்தை எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது, கற்பனையானது என்று இரு சகோதரிகள் கூறும் குற்றச்சாட்டு தவறானது என நடிகர்கள் ராம்குமார், பிரபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர். இவ்வழக்கை நாளை 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
90 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி
சிவகங்கை: ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிவகங்கையில் 90க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை பணமும் கடவுச் சீட்டையும் பெற்று ரூ.60 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துள்ள திருப்பாசேத்தியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

