சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மோசமடைந்துள்ளது. கடந்த 11ஆம் தேதி மூத்த தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தின் முன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதன் பின்னர் அந்த அலுவலகத்தை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
எனினும் பின்னர் வருவாய்த்துறை அந்த அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது.
இதையடுத்து இரு தரப்பினரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதிமுக அலுவலகச் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

