261 கோடி மரக்கன்றுகள் நடத் திட்டம்
காஞ்சிபுரம்: எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலம் தழுவிய அளவில் சுமார் 261 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடத் திட்டமிட்டு இருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மொத்த வனப்பரப்பை அதிகரிக்க பசுமைத் தமிழகம் என்ற இயக்கம் தொடங்கப்படும் என்றார். "இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 24%ஆக உள்ள வனப்பரப்பை 33 விழுக்காடாக அதிகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் 32 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தற்போது உள்ள 130,000 ஹெக்டேர் சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், 2030ஆம் ஆண்டுக்குள் 261 மரக்கன்றுகள் நடப்படும்," என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.
டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து தவறான தகவல்: கட்சி நிர்வாகிகள் புகார்
காஞ்சிபுரம்: டி.ராஜேந்தரின் உடல்நிலை குறித்து சிலர் தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் வழி பரப்பி வருவதாக அவரது தலைமையில் இயங்கி வரும் லட்சிய திமுக கட்சியின் நிர்வாகிகள் காஞ்சிபுரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கட்சித் தலைவர் குறித்து வெளியாகும் தவறான தகவல்களால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் ஏழு பேர் அகதிகளாக வருகை
ராமேசுவரம்: இலங்கையில் இருந்து மேலும் ஏழு பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேரும் இலங்கையில் இருந்து படகு மூலம் வந்துள்ளனர். ஏழு பேரும் தனுஷ்கோடி கடல் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டது குறித்து இந்தியக் கடலோரக் காவல் படைக்கு மீனவர்கள் மூலம் தகவல் தெரியவந்தது. அதன் பின்னர் அவர்கள் விரைந்து சென்று ஏழு பேரையும் மீட்டனர்.
86 சிறார்களுக்கு தொற்றுப் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக மேலும் 2,142 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. இவர்களில் 86 பேர் சிறார்கள் ஆவர். புதிதாக கிருமி தொற்றியவர்களில் ஆண்கள் 1,244 பேர் என்றும் பெண்கள் 898 பேர் என்றும் தெரியவந்துள்ளது. ஆக அதிகமாக சென்னையில் 561 பேரும் செங்கல்பட்டில் 296 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் புதிய தொற்றுப் பாதிப்புச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிறார்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் முகக்கவசம் அணிவது நல்லது என சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
ரூ.3,000 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோவில் சொத்துகள் மீட்பு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாக அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு ஜூலை 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 224 கோவில்களுக்குச் சொந்தமான 1906.39 ஏக்கர் நிலமும் 1738 சதுரஅடி கட்டடங்களும், 36 கிரவுண்டு திருக்குளமும் மீட்கப்பட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார். இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

