கடலூர்: சமூக ஊடகங்கள் மூலம் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக கடலூர், திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி தொடர்பாக கலவரம் வெடித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைப் பகுதியில், காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ஐந்து பேர் கூடிநின்று கொண்டு சின்னசேலம் கலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
மேலும், கடலூரிலும் அதேபோல் கலவரத்தைத் தூண்ட அவர்கள் திட்டமிட்டது காவல்துறைக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஐந்து பேரையும் பிடிக்க காவலர்கள் முயன்றபோது நான்கு பேர் தப்பிவிட்டனர். பிடிபட்ட இளையர் பெயர் விஜய் என்பதும் அவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் மூலம் மேலும் இருவர் பிடிபட்டனர்.
சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழி தகவல் பரப்பி கலவரத்தை தூண்டத் திட்டமிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

