சென்னை: அதிமுக தலைமை அலு வலகத்தில் ஜெயலலிதாவின் நினைவுப் பொருள்களாக இருந்த வெள்ளி வேல், செங்கோல்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள் மாயமாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
"சென்னை வானகரத்தில் இம்மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மூண்ட கலவரத்தில் இந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப்பொருள்களும் விலை உயர்ந்த பொருள்களும் காணாமல் போயுள்ளன. அலுவலகத்தில் இரும்பு அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயமாகி உள்ளன. காணாமல் போன பொருள்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசு களாகக் கொடுக்கப்பட்டவை," என்று செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கலவரம் காரணமாக 'சீல்' வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தை திறக்க அனுமதித்து, தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமி யிடம் ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று வட்டாட்சியர், கோட்டாட்சியர் தலைமையில் அதிமுக அலுவலகத்தின் 'சீல்' உடைத்து திறக்கப்பட்டது. அப்போது, பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் மேல்முறையீடு
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது இபிஎஸ் தரப்புக்கு கொண்டாட்டத்தை யும் ஓபிஎஸ் தரப்புக்கு பலத்த அடியையும் தந்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்ய உள்ளார். "கட்சி அலுவலகம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனி நீதிபதிக்கு இல்லை. எனவே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய் யப்படும்," என ஓபிஎஸ் வழக் கறிஞர் திருமாறன் கூறினார்.

