விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் 72 மாணவர்களை அவர்கள் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற காரணத்தால் இயற்பியல் ஆசிரியா் நந்தகோபால் மூங்கில் பிரம்பால் அடித்துள்ளார்.
இதனால், சில மாணவா்களின் முதுகு, கை, கால்களில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதை அடுத்து ஆசிரியர் நந்தகோபாலை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டாா்.
'பிளஸ் 2' மாணவா்களுக்கு இயற்பியல் ஆசிரியரும் உதவித் தலைமையாசிரியருமான நந்தகோபால் கடந்த செவ்வாயன்று தோ்வு வைத்தார். அதில், பெரும்பாலான மாணவா்கள் சரியாக விடையளிக்காததால் கோபமடைந்த ஆசிரியா் மாணவர்களைக் காயம் ஏற்படும் அளவுக்குத் தாக்கியுள்ளார்.
ஆசிரியர் நந்தகோபாலிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். அங்கு வந்த ஆட்சியா் த.மோகனும் நந்தகோபாலிடம் விசாரணை நடத்தினாா்.

