செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ac821476-b162-46d8-854a-9bb5a3b52473
-

கூடுதல் தடுப்பூசி போட தயக்கம்

சென்னை: நாடு முழுவதும் கொவிட்-19 ெதாற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்படுகிறது. செப்டம்பர் 30ஆம் தேதிவரை இலவச கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியை 1 கோடியே 45 லட்சம் பேர் இன்னும் போடாமல் உள்ளனர். 50 லட்சம் பேர் கூடுதல் தடுப்பூசி போடவேண்டியது உள்ளது. இலவச தடுப்பூசி அறிவிக்கப்பட்டாலும் மக்கள் இதனைப் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. வார விடுமுறை நாள்களில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

25, 27ஆம் ேததிகளில் ஆர்ப்பாட்டம்

சென்னை: மின் கட்டண உயர்வு, குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்குவதாகக் கூறிவிட்டு இன்னும் வழங்காமல் இருப்பது உள்ளிட்ட திமுக அரசின் மக்களுக்கு எதிரான போக்கைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் வரும் 25ஆம் ேததி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதில் இப்போது ஒரு மாற்றத்தை வெளியிட்டுள்ள அவர், சென்னையில் 27ஆம் தேதியும் மற்ற மாவட்டங்களில் 25ஆம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடக்கும் எனக் கூறியுள்ளார்.

முயல் வேட்டையின்போது மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், 45, வெங்கடேஷ், 44, சுப்பிரமணி, 40. இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, நிலத்தின் உரிமையாளர் சடகோபன் கைதானார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது.

கமல்: மாணவர்களைக் காக்க படை

சென்னை: மாணவர்களின் நலன் கருதி, உயிரை மாய்த்துக் கொள்வோரைத் தடுப்பதற்கு ஒரு படையை அமைக்க வேண்டும் என அரசை மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்குப் பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிந்து உதவவேண்டுமென கோரியுள்ளார்.