ஆலந்தூர்: நடிகர் சூர்யா நடித்த 'அயன்' திரைப்படத்தைப் போன்று, வயிற்றுக்குள் 86 போதை மாத்தி ரைகளை மறைத்துவைத்து கடத்தி வந்த தான்சானியா நாட்டுப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 9 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கம் அைனத்துலக விமானநிலையத்துக்கு வரும் ஒரு சில பயணிகள், இதுபோல் போதைப்பொருள், தங்க நகைகளைக் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், துபாயில் இருந்து அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சூழல் உள்ளதாக விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விழிப்புநிலையில் இருந்த அதிகாரிகள், துபாயில் இருந்து வந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பேட்ரிக், 28, என்ற பயணியைச் சோதித்தனர்.
"உகாண்டாவில் இருந்து துபாய் வழியாகச் சென்னைக்கு சுற்றுப் பயணம் வந்தேன்," என்று கூறிய ஜோசப்பின் பேச்சு சந்தேகப்படும் விதத்தில் இருந்தது.
இதையடுத்து, அவருடைய உடைமைகளைச் சோதித்ததில் எதுவும் சிக்காததால், சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரை அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்து பார்த்தனர்.
அப்போது, அவருடைய வயிற்றுக் குள் மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. ஜோசப்பை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்று, 'இனிமா' கொடுத்து, வயிற்றில் உள்ள 86 மாத்திரைகளையும் வெளி யேற்றினர்.
அவர் விழுங்கியிருந்த மாத்தி ரைகளைச் சுங்க அதிகாரிகள் உடைத்துப் பார்த்தபோது, அவற்றில் 1 கிலோ 256 கிராம் 'ஹெராயின்' போதைப்பொருள் மறைத்து வைக் கப்பட்டிருந்தது. கைதான ஜோசப் பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், சென்னை அனைத்துலக விமான நிலையத்துக்கு கொழும்பு, துபாயில் இருந்து வந்த நான்கு பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தனர். அவர்களிடம் 4 கிலோ 150 கிராம் தங்கம் இருந்தது.
அத்துடன், ரூ.18 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருள்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவை அனைத்தையும் கைப்பற்றிய அதிகாரிகள் நான்கு பேரையும் கைதுசெய்தனர். கைப்பற்றிய பொருள்களின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.2 கோடியாகும்.

