செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2c7c949d-ea0b-4114-b1a5-c351c3535874
-

கடலுக்கு நடுவே 134 அடி உயர பேனா சின்னம் அமைக்க திட்டம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மெரினா கடலின் நடுவே ரூ.80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் சின்னத்தை அமைக்கவும், அதனைப் பார்வையிடும் வகையில் 650 மீட்டருக்கு கண்ணாடிப் பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல்.

400 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளகவி கிராமத்திற்கு சாலை

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள மிகப்பழமையான வெள்ள கவி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இருப்பினும் அக்கிராமத்திற்கு 400 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சாலை வசதி செய்து தரப்படவில்லை. இந்நிலையில், இதற்கு ஒரு தற்காலிக தீர்வாக மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரபோஜி மன்னா் ஓவியம்

அமெரிக்காவில் இருப்பதாக தகவல்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் சரஸ்வதி மகாலில் இருந்து திருடப்பட்ட 19ஆம் நூற்றாண்டு சரபோஜி மன்னா் ஓவியம் அமெரிக்காவில் இருப்பதைக் கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1822-1827 காலகட்டத்தில் இந்த ஓவியம் வரையப்பட்டு, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டிருந்த மன்னா்கள் சரபோஜி, அவரது மகன் சிவாஜி ஆகியோா் இணைந்திருக்கும் ஓவியம் திருட்டுப் போனது. இந்நிலையில், கடந்த 2017ல் ராஜேந்திரன் என்பவா் அளித்த புகாரைத் தொடா்ந்து, தற்போது இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அந்த ஓவியத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் மேற்கொண்டுள்ளனா்.