கடலூர்: கள்ளக்குறிச்சியில் படித்து வந்த 17 வயது 'ப்ளஸ் 2' மாணவி ஸ்ரீமதியின் உடல், அவருக்குப் பிடித்தமான உயிரியல் பாட புத்த கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களுக்கும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இவர்களைத் தவிர வெளியூர் ஆட்களோ, பிற அமைப்பினரோ யாரும் பங்கேற்கக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது.
அதன்படியே, நேற்று மாணவி ஸ்ரீமதியின் இறுதிச் சடங்குகள் நடந்தன. வாகனத்தில் வைத்து அவரது உடல் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு, அவரது தந்தை கண்ணீர் மல்க இறுதிச் சடங்கு களைச் செய்தார்.
மாணவியின் ஆத்மா சாந்தி அடையும் வகையில் அமைச்சர், எம்எல்ஏக்கள், உறவினர்கள் இரண்டு நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், "வீர வணக்கம் வீர வணக்கம்" என முழக்கமிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி இம்மாதம் 13ஆம் தேதி பள்ளியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர், மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி நடந்த வன்முறையில் பள்ளியில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாகின. பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி சூறையாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் இருமுறை உடல்கூராய்வு செய்யப்பட்டு, நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான காவ லர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கிறேன். அவள் மரமாக வளர்ந்து அவளது இறப்புக்கு காரணமானவர்களை வேரறுப்பாள். இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் எந்த மாணவிக்கும் நேரிடக்கூடாது.
கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம்

