செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9b3662c2-47e0-4460-a0d5-0410baa4ea7c
-

10 லட்சம் தேசியக் கொடிகள் தயாரிக்க இலக்கு

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியேற்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக கோவை, திருப்பூர் கொடி உற்பத்தியாளர்களிடம் பணிப்புகள் (ஆர்டர்) குவிந்துள்ளதால், பத்து லட்சம் தேசியக் கொடிகளைத் தயாரிக்கவும் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

'சான்றிதழ்கள் பாதுகாப்பாக உள்ளன'

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நீதி கேட்டு மாணவர்கள் தொடர்ந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால், கனியாமூர் தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு, சூறையாடப்பட்டது. இந்தக் கலவரத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்களும் எரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இணையத்தில் அனைத்து சான்றிதழ்களும் பாதுகாப்பாக உள்ளதாக இம்மாவட்ட ஆட்சியர் ஸ்வரன்குமார் ஜடாவத் கூறியுள்ளார்.

சிறுமிக்கு மது, பீடி புகைக்க கற்றுக்கொடுத்த ஆறு பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பூப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி மது அருந்தி விட்டு, பீடி புகைப்பது போல சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியானது. இதுகுறித்து இம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த இளையர்கள், சிறுமிக்கு தீய பழக்கங்களைக் கற்றுக்கொடுத்தது தெரியவந்தது. ஆறு இளையர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனர்.

கணக்குகளை முடக்க கோரிக்கை

சென்னை: அதிமுகவின் கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட ஏழு வங்கிக் கணக்குகளை முடக்கும்படி சென்னை ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பணப் பரிவர்த்தனைகளை நிறுத்திவைக்கவும் கோரியுள்ளார். தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை தாம்தான் அதிமுக பொருளாளர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனமழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளில் பெய்த கனமழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இங்குள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், தேங்கியுள்ள நீரை மோட்டார் மூலம் ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது சதுரங்கப் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் நேற்றுமுதல் வரத் தொடங்கி உள்ளனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்று வருகின்றனர்.

இதனிடையே, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "சதுரங்கப் போட்டியின் தொடக்க நாளான 28ஆம் தேதி அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்," என்று தெரிவித்தார்.