கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித் துறை நடவடிக்கை
மதுரை: தனியார் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாக மதுரையில் பரபரப்பு நிலவியது. சோதனையின்போது ரூ.165 கோடி ரொக்கப் பணமும் 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயபாரத், அன்னை பாரத், கிளாட்வே சிட்டி ஆகிய மூன்று கட்டுமான நிறுவனங்கள் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் முறையாக வருமானவரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகள் வருமானவரித் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.
அதன் பின்னர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்பே மூன்று நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் மாலை வரை நீடித்த சோதனையின்போது அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், நிறுவனப் பங்குதாரர்கள், ஊழியர்கள் சிலரது வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நான்கு நாள்களுக்கு விடிய, விடிய நடைபெற்ற சோதனையின்போது, முருகன் என்பவரது வீட்டில் இருந்து ரூ.75 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், ரூ.93 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல் செந்தில்குமார் என்பவரின் வீட்டில் இருந்து 2.7 கிலோ தங்கம், ரூ.1.96 மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அழகர் என்பவரது வீட்டில் இருந்து ரூ.90 கோடி ரொக்கம், ரூ.130 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக இந்தச் சோதனை நடவடிக்கையின்போது மொத்தம் 14 கிலோ தங்கம், ரூ.165 கோடி ரொக்கப்பணம், ரூ.235 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

