செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
5b39b111-5b65-4407-b933-9df87d84668e
-

அமைச்சர்: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை இல்லை

சென்னை: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார். "குரங்கம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. பன்னாட்டு விமான நிலையங்களில் அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முகத்தில், முழங்கை கீழ்ப்பகுதியில் கொப்பளங்கள் உள்ளதா என ஒவ்வொருவரையும் விமான நிலையங்களில் கண்காணிக்க அறிவுறுத்தி வருகிறோம்," என்றார் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மரம் நட்டால் மின்சாரம் இலவசம்: அரசுக்கு ஆலோசனை வழங்கிய பாமக

சென்னை: மரம் நட்டால் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை வழங்கி உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஐந்து அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். "சுற்றுச்சூழலைக் காக்க பசுமைப்போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதைச் சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமானது. அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறேன்," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம்: சென்னையில் இரு தினங்களுக்கு மழை நீடிக்கும்

சென்னை: அடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அம்மையம் கணித்துள்ளது. "வடகடலோர தமிழகம், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 26 முதல் 27ஆம் தேதி வரை கனமழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மாநிலம் முழுவதும் அதிக மழையை தந்துள்ளது," என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ரூ.80 கோடியில் நினைவுச் சின்னம்: விஜயகாந்த் கண்டனம்

சென்னை: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்பகுதியில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு லாபம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதி, சாலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தினால் மக்கள் அதனை வரவேற்பார்கள் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர் என்றும் அம்மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், உக்ரேனில் மருத்துவம் பயின்று வந்த 2,000க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். "நாடு திரும்பிய மாணவர்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். மாணவர்கள் கல்வி தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் ஏற்கெனவே தாமதம் ஆகிவிட்டது. மாணவர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ மருத்துவப் படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும்," என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தூய்மைப் பணி தீவிரம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற தீவிர தூய்மை பணியின் மூலம் 192.36 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்கள், சாலை மையத்தடுப்புகளில் 916 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.