திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி உள்ளதை அடுத்து, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
மேலும், தமிழக - கேரள இதர எல்லைப் பகுதிகளும் கண்காணிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி, வயநாட்டை ஒட்டி அமைந்துள்ளது. எனவே, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு நீலகிரிக்கும் எளிதில் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, வயநாட்டை ஒட்டி உள்ள தமிழகப் பகுதிகளில் இயங்கி வரும் பொது சுகாதார மையங்கள் கூடுதல் விழிப்புநிலையில் உள்ள தாக மாநில சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி தெரிவித்துள்ளார்.
எல்லையோரப் பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடனோ அல்லது தீவிர காய்ச்சலுடனோ யாரேனும் வந்தால் உடனடியாக அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம். காய்ச்சல் இருந்தால் டெங்கி உள்ளிட்ட ஐந்து வகை பாதிப்புகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"காய்ச்சல், நுரையீரல் தொற்று உள்ளவர்களை நன்கு கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மக்கள் அச்சப்படத் தேவையில்லை," என்றார் பாலுசாமி.
கேரளாவில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே, அவர்கள் மூலம் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதை சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

