ராமேசுவரம்: இலங்கை கடற்படை கைது செய்துள்ள ஆறு மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ராமேசுவரம் கடற்பகுதியில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.
தனுஷ்கோடி, தலைமன்னார் கடற்பகுதிகளுக்கு இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றிவளைத்தனர்.
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்தப் படகில் இருந்த ஆறு தமிழக மீனவர்கள் கைதான நிலையில், விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆறு மீனவர்களையும் விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
மேலும், நேற்று ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் மீனவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

