சென்னை: அதிமுக தலைமை அலுவலக பத்திரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்தவர்கள் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கட்சி சொத்துகளை சூறையாடி உள்ளனர் என்று புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11ஆம் தேதி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கையில் ஆயுதமேந்திய 300 அடியாட்கள், குண்டர்களுடன், தன் பிரசார வாகனத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்ததாகவும் பின்னர் அலுவலக கதவை உடைத்து நுழைந்து, அங்கிருந்த அனைத்து பொருள்களையும் அடித்து நொறுக்கியதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
"அதிமுக தலைமை அலுவலகத்தின் அசல் பத்திரத்தை பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் பல அசல் ஆவணங்களையும் காணவில்லை.
"கொள்ளையடித்த ஆவணங்களை பன்னீர்செல்வம் வந்த வாகனத்தில் ஏற்றினர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
"உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தலைமை அலுவலகத்தின் சாவி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
"அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது அனைத்து அறைகளும் கடப்பாரையால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
"அலுவலகக் கணக்கு அறை உள்ளே இருந்த பீரோவை உடைத்து தலைமை அலுவலகத்தின் அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது," என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தை பன்னீர்செல்வம் தரப்பினர் கைப்பற்றினர். எனினும், பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தலைமை அலுவலகச் சாவி ஒப்படைக்கப்பட்டது.

