செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ddc159a4-de67-4748-a213-a88019b11a7c
-

உரிமையாளருக்கு வலைவீச்சு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின்போது கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்களின் பதிவெண் களைக்கொண்டு அதன் உரிமையாளரைத் தனிப்படை காவலர்கள் தேடி வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி பள்ளியில் நிகழ்ந்த வன்முறையின்போது 141 இரு சக்கர வாகனங்களைக் காவலர்கள் கைப்பற்றினர். அவற்றைத் திரும்பப் பெறவந்தால் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் இதுவரை காவல்நிலையத்தை யாரும் அணுகவில்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கார் வேன் மோதல்: மூவர் பலி

அருப்புக்கோட்டை: ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த 16 பேர் சரக்கு வாகனத்தில் இருக்கன்குடி கோவிலுக்குச் சென்று விட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். தூத்துக்குடி, மதுரை நான்கு வழிச்சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த காருடன் மோதியதில் சரக்கு வாகனம் சாலை ஓரம் இருந்த ஓடையில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரில் இருந்தவர்கள் தப்பினர். காவலர்கள் விசாரிக்கின்றனர்.

மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கும் இளையராஜா

சென்னை: இசைஞானி இளையராஜா நேற்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக்ெகாண்டார். இதற்காக டெல்லி சென்ற அவருக்கு பாஜகவினரும் அவரது ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக்கொண்ட இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி என்பவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், வேதியியல் பாடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கோபி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டு உள்ளது. விடுமுறை நாள்களில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி குற்றம்சாட்டி உள்ளார்.