சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை விருது வழங்கி கௌரவித்துள்ளது.
"நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல; சூப்பர் பேயரும் கூட (அதிக வரி செலுத்துபவர்). இதனால் மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்," என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டினார்.
வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மண்டலத்தில் அதிகளவில் வருமான வரி செலுத்தியவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி ெசன்னை ஆழ்வார்பேட்டை இசைக் கழகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தெலுங்கானா, புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகளவில் வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நால்வருக்குத் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கினார்.
ரஜினிகாந்த் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யா, தமிழிசை சௌந்தரராஜனிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
"நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய, வரி செலுத்துவது இன்றியமையாதது. வரி செலுத்துவது ஒவ்வொருவரின் அடிப்படை கடமை. மக்கள் தாமாக முன்வந்து வரிசெலுத்தவேண்டும். தமிழகத்தில் உள்ள சிறார் இல்லங்களை மேம்படுத்துவதற்கு வரி செலுத்துவோரும் வருமான வரித் துறையினரும் முன்வர வேண்டும்," என்று முனீஷ்வர்நாத் பண்டாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

