நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி காட்டுப்பகுதி யில் வசித்து வந்த 'டி 23' எனப் பெயரிடப்பட்ட ஆட்கொல்லிப் புலியை உயிருடன் பிடிக்க கடுமையாக உழைத்த மூன்று வேட்டைத் தடுப்புக் காவலா்களுக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெகுமதியுடன் கூடிய விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
இவ்விருது அனைத்துலக புலிகள் தினமான ஜூலை 29ஆம் தேதியன்று பொம்மன், மாதன், மீனா காளன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வந்த நான்கு பேரையும் இருபதுக்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அந்தப் புலி கொன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் அப்புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
"பொம்மன், மாதன், மீனா காளன் ஆகிய மூவரின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்பட இருப்பது பெருமையாக உள்ளது," என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

