உலகப் போட்டி இன்று கோலாகல தொடக்கம்: வீரர்கள் வந்தனர்; பிரதமர் மோடி வருகிறார்
சென்னை: உலக சதுரங்கக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் 'செஸ் ஒலிம்பியாட்' என்ற உலக சதுரங்கப் போட்டி இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்கிறது.
அந்த 44வது உலக சதுரங்கப் போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை நேரு திடலில் மிகக் கோலாகலமாக நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கிவைக்கிறார்.
உலக சதுரங்கப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த ஆடவர், மகளிர் பிரிவுகளில் 356 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 2,000 சதுரங்க வீரர்கள் பங்கேற்கிறார்கள். போட்டிகளை நடத்துவதற்காக தமிழ்நாடே தயார்நிலையில் விழாக்கோலம் கொண்டிருக்கிறது.
போட்டி நடக்கும் மாமல்லபுரத்தில் 22,000 சதுர அடி பரப்பில் ஓர் அரங்கமும் 52,000 சதுர அடி பரப்பில் மற்றொரு அரங்கமும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில், நேற்று நடந்த இறுதிக்கட்ட பணிகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாகப் பார்வையிட்டு அனைத்து பிரிவினரையும் அதிகாரிகளையும் ஊக்கப்படுத்தினார். கலை நயமிக்க நினைவுத் தூண் ஒன்றைத் திறந்து வைத்த முதல்வர், விளையாட்டு வீரர்களுக்கு நேற்று மாலை விருந்தளித்துச் சிறப்பித்தார்.
போட்டியில் ரஷ்யா, சீனா நாடுகள் பங்கு பெறவில்லை. உலக சதுரங்க வீரராக பல முறை வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாத ஆனந்தும் போட்டியில் நேரடியாகப் பங்கேற்கவில்லை.
இந்திய தரப்பில் மூன்று அணிகள் களம் இறங்குகின்றன.
சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற மாமல்லபுரம் இப்போது வண்ணக்கோலம் பூண்டுள்ளது. உலகமே உற்றுநோக்கும் வகையில் இந்தப் போட்டியை மிக வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாமல்லபுரத்தில் 6,000 காவல்துறை அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர், 30 மருத்துவ வண்டிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இதனிடையே, சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்திருக்கும் ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் ஃப்ரான்சிஸ்கோ வல்லேஜோ போன்ஸ், இதுவரை தான் ஒன்பது உலகப் போட்டிகளில் கலந்து கொண்டு இருப்பதாகவும் ஆனால், மாமல்லபுரம் சதுரங்க அரங்கைப் போல இதுவரை வேறு எங்கும் தான் கண்டதில்லை என்றும் டுவிட்டரில் வர்ணித்தார்.
உலக சதுரங்கப் போட்டியை யொட்டி ஏராளமான சுற்றுப்பணிகள் சென்னை வந்துள்ளனர்.

