திருவள்ளூர்: தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இம்மாதம் 24ஆம் தேதி பாம்பு கடித்துவிட்டது என்றும் அதன் காரணமாக அந்தச் சிறுமி மரணமடைந்துவிட்டார் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து தன்னுடைய உறவினர் வீட்டில் அந்தச் சிறுமி வளர்ந்து வந்தார்.
சிறுமியின் உறவினர்கள் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த அற்றைக் கூலி ஏழைகள், படிக்காதவர்கள்.
வயல்வெளிக்கு சிறுமி சென்றபோது அங்கு அவரை பாம்பு கடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி மரணமடைந்தார். உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாலு என்ற 78 வயது காமுகன், அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததைக் காட்டும் ஒரு காணொளி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திடீரென தலைகாட்டியது.
அதன் தொடர்பில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சிறுமியின் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்தக் காணொளியைத் தங்களுக்கு இடையே பகிர்ந்து கொண்டதைக் கண்டுபிடித்தனர்.
சிறுமி மரணமடைந்ததற்கு மூன்று மாதங்களுக்கு முன் காமுகன் பாலு அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை அப்போது அந்த வழியே வந்த வெளியூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் பார்த்து அதை அப்படியே தன் கைபேசியில் படம் எடுத்ததாக நம்பப்படுகிறது.
அந்த இளைஞன் சிறுமியின் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நண்பன் என்பதும் தெரியவந்தது.
சிறுமி மரணம் அடைந்ததை அடுத்து அந்த முதியவர்தான் சிறுமியைக் கொலை செய்து இருக்கலாம் என்று கருதிய அந்த இளைஞர்கள், தங்களுக்கிடையில் காணொளியைப் பகிர்ந்துகொண்டதாகவும் பிறகு அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அந்தக் காணொளியை காமுகன் பாலுவிடம் காட்டி அவரிடமிருந்து பணம் பறிக்க அந்த இளைஞர்கள் முயன்று இருப்பதாகவும் அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாலு கைதாகி இருக்கிறார். விஜயகுமார், சதீஷ், ரமேஷ், பாஸ்கர் ஆகிய நான்கு இளைஞர்களையும் கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
"அந்தக் காணொளியைப் பார்க்கும்போது அந்த 78 வயது காமுகன் சிறுமியைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியது நன்றாகத் தெரிகிறது.
"சிறுமி, அந்தக் காமுகனைப் பிடித்து தள்ளியும் சிறுமியிடம் அந்த நபர் முரட்டுத் தனமாக நடந்துகொண்டிருக்கிறார்.
"ஆனால் சிறுமி மரணமடைந்ததற்கு பாம்பு கடித்ததுதான் காரணம்; முதியவர் அல்ல," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசாரணை தொடர்வதாகவும் அவர் கூறினார்.

