சென்னை: தமிழ்நாட்டில் 1,545 அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 114,095 பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' என்று குறிப்பிடப்படும் அந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
உப்புமா, கிச்சடி, ரவா பொங்கல், வெண்பொங்கல், காய்கறி சாம்பார் உள்ளிட்ட பலவும் காலை சிற்றுண்டியில் இடம்பெறும்.
வாரத்தில் இரண்டு நாள்களில் உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்தக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்டம் தோறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு சிற்றுண்டி விநியோகிக்கப்படும்.

