100 மூட்டை சர்க்கரை, பருப்பு மாயம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே நியாயவிலைக் கடை பூட்டை உடைத்து 100 மூட்டை சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கடையில் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படையில், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட பிரமுகர்கள் அந்தக் கடைக்குச் சென்று பொருள்களை தங்கு தடை இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று அலுவலர்களை எச்சரித்துச் சென்றதை அடுத்து திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆவின் இலக்கு ரூ.200 கோடி
சென்னை: இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ரூ.200 கோடிக்கு இனிப்பு, பால் பொருள்களை விற்க வேண்டும் என்று தமிழக அரசின் ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்ற ஆண்டில் அந்த நிறுவனம் ரூ.80 கோடி மதிப்புள்ள இனிப்பு, பால் பொருள்களை விற்பனை செய்தது.
30 தொழிலாளர்கள் மீட்பு
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள நெய்காரப்பட்டி, பெரியம்மாபட்டி, பெருமாள்புதூர் பகுதிகளில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பலர் ஆண்டுக் கணக்கில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக புகார் வந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், 30 தொழிலாளர்களை மீட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
இதன் தொடர்பில் மூவர் விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
கைதிகள் மரணம் 73% அதிகரிப்பு
புதுடெல்லி: தமிழகத்தில் விசாரணைக் கைதி மரண எண்ணிக்கை ஓராண்டில் 73% அதிகரித்து உள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2020-21ஆம் ஆண்டில் 63 பேர் உயிரிழந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கஞ்சா விற்ற காவலர் கைது
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள சேரம்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த அமரன், 25, என்ற காவலர், கஞ்சா விற்றதன் தொடர்பில் கைதானார். இதர இரண்டு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கணேசன் என்ற வேறு ஒரு காவலரை அதிகாரிகள் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்துல் கலாம் 7வது நினைவுநாள்
இந்தியாவின் முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் குடும்பத்தினர், பொதுமக்கள் ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்துல் கலாம் 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடியபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். படம்: தமிழக ஊடகம்

