கடலூர்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கானூங்கோ தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. அந்தத் தனியார் பள்ளி பொதுமக்களால் சூறையாடப்பட்டது. மாணவியின் உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி காவல்பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் சின்னசேலத்தில் விசாரணை நடத்தினர்.
அதன் மூலம் அந்தத் தனியார் பள்ளியில் உரிய அனுமதி பெறாமலேயே மாணவியர் விடுதி செயல்பட்டு வருவது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, அந்தத் தனியார் பள்ளியில் மாணவியின் உயிரிழப்புக் குறித்து விசாரணை மேற்கொண்டது.
மேலும், மாணவியின் பெற்றோரிடமும் ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் அக்குழுவின் தலைவர் பிரியங் கானூங்கோ செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
"பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி செயல்பட்டுஇருப்பதோடு, மாணவர்களுக்கு அடிப்படை வசதி குறைபாடுகளும் உள்ளதை குறிப்பெடுத்துள்ளோம்.
"மாணவி உயிரிழப்புத் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகளும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவு இருப்பதும் எங்களது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம்," என்றார் பிரியங் கானூங்கோ.
இதற்கிடையே மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய சிபிசிஐடி காவல்துறையினர் அதற்கான அனுமதி அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு முன்பாக 12 மணி நேரத்திலேயே விசாரணையை முடித்துள்ளது.
காவல்துறையின் இச்செயல் பாட்டை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

