ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்
குமரி: ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி கடலில் நேற்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். படம்: தகவல் ஊடகம்
'பள்ளி சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு'
சென்னை: பள்ளியின் சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்தி னால் பெற்றோர்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அத்துறையின் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், பெற்றோர்தான் அவற்றை மாற்றித் தர வேண்டும் என்றும் தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் டிஜிபிக்கு அரசு நிலம் ஒதுக்கீடு; அமலாக்கத்துறை விசாரணை
சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு, வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். அக்குறிப்பிட்ட நிலத்தில் வீடு கட்டாமல், சட்டத்துக்குப் புறம்பாக வணிக வளாகம் கட்டப்பட்டதாக, 2011-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சட்டவிரோத வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையில் அவர் ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறையி னர் 2020ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜாபர் சேட்டுக்கு வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்பட்ட காலகட்டத்தில் ஐ.பெரியசாமி வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தார்.
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவினர், 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

