செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f01cf426-40e6-4a0c-b047-5192cf6432c3
-

'விருந்தினர்கள் கடவுள் போன்றவர்கள் என விளக்கம்'

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 44வது சதுரங்கப் போட்டியின் தொடக்கவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற திருக்குறளைத் தமிழில் சொல்லி மோடி பேசினார். சம்பாதிப்பதும் வீடு வாசல் இருப்பதும் விருந்தினர்களை உபசரித்து வாழ்வதற்குத்தான் என்பது இக்குறளின் அர்த்தம். இந்தியாவைப் பொருத்தவரை விருந்தினர்கள் கடவுள்மாதிரி. அதனால்தான் அனைத்துலக வீரர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்துள்ளோம் என மோடி பேசினார்.

கறுப்புக் காய்களுடன் இந்தியா

மாமல்லபுரம்: 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் தொடங்கிவைத்து பேசினார். இந்திய அணிக்கான சதுரங்கக் காய் தேர்வு விழா மேடையில் நடந்தது. வெள்ளை, கறுப்புக் காய்கள் கொண்டுவரப்பட்டன. பிரதமர் மோடி கறுப்புக் காயைத் தேர்வு செய்தார். நேற்று முதல் நடைபெறும் போட்டியில் இந்திய அணி கறுப்புக் காய்களுடன் விளையாடியது.

போட்டியாளர்களுக்கு 3,500 உணவுகள், யோகா பயிற்சிகள்

மாமல்லபுரம்: சென்னை மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் நடந்துவரும் சதுரங்கப் போட்டியில் 189 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்ேகற்கின்றனர். இந்தியா சார்பில் 30 பேர் ஆறு குழுக்களாகப் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில், இப்போட்டிக்காகத் தயாராகி வரும் வீரர், வீராங்கனைகளுக்கு, ஆசியா முதல் இத்தாலி வரை அனைத்து நாடுகளையும் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன. போட்டியின் வெற்றிக்காக வீரர்கள் பாடுபடுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதால், அனைத்து வீரர், வீராங்கனை களுக்கும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், மன அழுத்தம் குறைந்து, விளையாட்டில் முழுக்கவனம் செலுத்தலாம் என்று கூறப்படுகிறது.

சதுரங்கப் போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்

லாகூர்: சதுரங்க ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு திடீரென அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிப்பதாகவும் தங்களது நாட்டின் சார்பாக 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் யாரும் பங்கேற்க விரும்பவில்லை எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை அனைத்துலக சதுரங்க கூட்டமைப்பிடம் உயர்மட்ட அளவில் எழுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளது. இதனை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், "அனைத்துலக விளையாட்டை பாகிஸ்தான் அரசியலாக்கி உள்ளது. அவர்களது அணி வீரர்கள் ஏற்கெனவே இந்தியா வந்தபின்னர் இவ்வறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது," என வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை அறிகுறிகளுடன் ஒரே குடும்பத்தில் மூவர் பாதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன், மகளும் மற்றொரு ஆடவரிடமும் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இவர்கள் நால்வரையும் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.