செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
33ddf4ad-1cd3-4350-bd32-e82ca9e4a8a6
-

முயல் வேட்டையில் மூவர் பலி

மதுரை: முயல் வேட்டைக்குச் சென்று, மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 52. இவருக்கு அஜித், 25, சுகந்திர பாண்டி, 23, என இரு மகன்கள் உள்ளனர். தந்தை-மகன்கள் என மூவரும் முத்துக்குமார் என்பவரின் வயல்வெளி பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்றிருந்தனர்.

அப்போது, பன்றியைக் கொல்வதற்காக வைத்திருந்த மின்வேலியில் கால் வைத்து, மின்சாரம் பாய்ந்து மூவரும் உயிரிழந்தனர். திருப்பாச்சேத்தி காவலர்கள் மூவரின் உடலையும் மீட்டு உடல்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் பலி

பெரம்பலூர்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னார் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் முருகன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மங்களமேடு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறள் ஒப்புவித்த 5,000 மாணவர்கள்

கோவை: கோவையில் 5,000 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி, திருக்குறளை ஒன்றாக ஒப்புவித்து அசத்தினர். ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் இரண்டு குறள்கள் வீதம் 20 குறள்களை அனைத்து மாணவ மாணவிகளும் ஒப்புவித்தனர். இந்த திருக்குறள்களுக்கான விளக்கத்தை ஆசிரியர்கள் அளித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர்.

சிைறயில் கைபேசி பறிமுதல்

சென்னை: சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் கைதிகள் இருக்கும் அறையை சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கஞ்சா வழக்கில் கைதான பாஸ்கர், கார்த்திகேயன் ஆகியோரின் அறையில் இருந்து கைபேசி, மின்னூட்டி(சார்ஜர்), பேட்டரி, சிம் கார்டுகள் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இம்மாதத்தில் மட்டும் இதுபோல் இரண்டாவது முறையாக கைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறைக்குள் கைபேசி எப்படி வந்தது என விசாரணை நடக்கிறது.

விடுமுறையில் வகுப்புகள் கூடாது

சென்னை: விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என்றும் பள்ளி நாள்களில் மட்டுமே மாணவர்கள் வரவேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.