மதுரை: ஆணாக மாறிய தனது தோழியைக் காதலித்து, திருமணம் செய்துகொண்ட பெண்ணை, பெண்ணின் குடும்பத்தினர் கடத்திச் சென்றது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
"மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். ஆகவே, அவரது விருப்பப்படி நடந்துகொள்ள அனு மதிக்கிறோம்," என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆணாக தனது பாலினத்தை மாற்றிக்கொண்டார். இவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், எனக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நாங்கள், கடந்த 7ஆம் தேதி திருமணம் செய்துகொண்டோம்.
இந்நிலையில், எனது மனைவி யின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இம்மாதம் 16ஆம் தேதி நாங்கள் வசித்து வந்த வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கி, மனைவியைக் கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனது மனைவிக்கு சிகிச்சை வழங்குவதாகச் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் (shock treatment) கொடுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதோடு, எனது மனைவியின் சகோதரரும் என்னுடனான உறவை முறித்துக்கொள்ளும்படி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். என்னையும் மிரட்டினார்.
எனவே, என் மனைவியின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனைவி 21 வயது நிரம்பியவர் என்பதால், அவரது விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அனுமதியளித்து தீர்ப்பளித்தனர்.

