செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
353093e1-e9fc-44cd-93d0-49184a3d6f79
-

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இருதரப்பும் ஆயத்தம்

சென்னை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகிய இரு தரப்பினருமே பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர்.

செவாலியே விருதுக்கு தேர்வான கண்ணனுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டின் 'செவாலியே விருது' பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் 'காலச்சுவடு' கண்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "பதிப்புத் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவை மேம்படுத்துவதற்குப் பங்காற்றி யதற்காக, பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் 'காலச்சுவடு' கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த சொகுசு கார்

ராசிபுரம்: பட்டணம் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் காரில் இருவர் இருந்ததாகவும் காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டிச் சென்றதாகவும் தெரிகிறது. அந்தக் கார் பட்டணம் சக்தி நகர் பகுதிக்கு வந்தபோது சாலையோரத்தில் இருந்த வீரன் நைனாம்பாள் தம்பதியரின் குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்த கிஷோர் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி ராசிபுரம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.