மதுரை: தமிழகத்தில் திருப்பூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மதுரையில் இடி, கனமழை பாதிப்பால் நால்வர் உயிரிழந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தென்மேற்குப் பருவமழை காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. நெசவாளர்களின் வீட்டுக் கூரைகள் பலத்த காற்றினால் தூக்கிவீசப்பட்டன.
சாலையில் வெள்ளநீர் தேங்கிய தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆங்காங்கே மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததில் மின்தடை ஏற்பட்டது.
மதுரையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மாநகரம் தத்தளித்தது.
மீனாட்சி அம்மன் கோவிலுக் குள்ளும் மழைநீர் புகுந்தது. சுவாமி சன்னிதி கொடி மரம் பகுதியில் தண்ணீர் தேங்கியது. கோவில் யானை பார்வதி, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டது. கோயில் பணியாளர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, மதுரை, ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில், முருகன், ஜெகதீசன் ஆகிய இருவரும் மின் மோட்டார் அருகே அமர்ந்து தச்சுவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
அதேபோல், மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே, மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய ஒரு தம்பதியினர் உயிரிழந்தனர்.
கோவை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
ேதனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாற்று அணையின் நீர்மட்டம் உச்ச அளவை எட்டியதால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னுரைத்துள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, வல்லம், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பெருகி ஓடியதால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.